சுயம்


 

நிறக்குடுவையொன்றில்
அவள் முகம்
அகப்பட்டிருந்தது
நீண்ட நாட்களாக
விடுபடுவதற்கான
எல்லா விதமான
முயற்சிpகளும் அவளிடமிருந்து
பறிக்கப்பட்டிருந்தது…

நிறக்குடுவையின்
இருப்பில் அவள்
தன்னிலையை
தொலைத்திருந்தாள்

சுவாசக் காற்றின்
வெப்பஊற்றில்
சலனமற்று போயிருந்தது
ஞாபகங்களின் குறிப்புகள்….!

அவளின் அறைகளின்
மூழ்கியிருந்த இருளின்
நெடிய தேடலில்
சில தடயங்கள்
அவளிடம்
சிக்கியது…!

விடுபடுவதற்கான
உள் உந்துதல்
மெல்ல
விரிசல் விட்டு
எழுந்தது…!
முதல் முறையாக
நிறக்குடுவையை உடைத்துக் கொணடு
வெளியேறினாள்….

ஆக
புரதானமான
இதயமொன்றின்
செய்தியை தேடி
நகரம் முழுவதும்
அலைந்தவளுக்கு
முடிவாக
கிடைத்தது
ஓர் சங்கீதம் நிரம்பிய
சாகரமொன்று…

சில நினைவுகள்
காற்றின்
மென் தடங்களின் கீழ்
பழைமையானதொரு
தொன்மையை தேடி
தன் இலக்குகளை
தீர்மானித்து
உறுதிபட
இனறும்,
தனிமையுடன்…….

Advertisements

Comments are closed.

%d bloggers like this: