நல்ல சினிமா


ஈழத்தமிழர்களின் சினிமா வளராமைக்கு காரணம் பேரினவாத இன ஒடுக்குமுறை அரசியல் ஒரு காரணம் என்றாலும் நான் நம்முடைய தமிழ் சினிமா தனித்துவத்துடன் இல்லாமல் போகும் காரணிகளையே குறிப்பிட்டு பேசுகின்றேன். நம் சினிமா வளராமைக்கு வெறும் அரசியல் காரணங்களை முன்வைத்து நம்முடைய படைப்புணர்வு ஏதுமற்ற சுய திராணியற்ற முகத்தை ஒற்றை தன்மை கருத்தாக்கத்தின் மூலமாக மறைத்துவிட முனைகின்றோம். நம்முடைய படைப்புணர்வுற்ற இயலாமையை பேரினவாத அரசியலுக்கு முன் வைத்து சமாளித்தபடி இருக்கின்றோம் என்பதை யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துவிட முடியாது. உலகில் மிக சிறந்த சினிமாக்களை உருவாக்கும் இயக்குநர்கள் வெறுமனே உருவாக்கிவிடவில்லை. ஒடுக்குமுறையும் பாசிசமும் நிறைந்த களத்திலிருந்துதான் சிறந்த திரைப்படங்கள் உருவாகின்றன என்பதை நம்மவர்கள் மறந்துவிட கூடாது. இப்படிப்பட்ட திரைப்படங்கள் அதனுடைய ஒடுக்குமுறை அரசியலை படைப்பின் வழி முன்வைப்பதன் வாயிலாக அது மேலெழுந்து வரும் பிரக்ஞைக்கும் உலகின் கவனத்துக்கும் கொண்டு வருகின்றது. திரைப்படங்கள் வாயிலாகவே ஒடுக்கு முறைகளையும் அடக்குமுறைகளையும் தகர்த்தெறிகின்றது. ஆனால் இப்படியான திரைப்படங்கள் நிலவுகின்ற பொது புத்திக்கு எதிரான சுயமான அரசியல் பிரக்ஞையின் மூலமாக படைப்பு ஆளுமையுடன் வெளிவருவதை நம்மவர்கள் கவனத்துடன் மனதில் நிலை நிறுத்த வேண்டும். நம்முடைய பிரச்சினை என்பது ஒடுக்குமுறைக்கான அரசியலின் பலிக்கு பலியாகி போவதென்பதல்ல, என்னளவில் நாம் நம் தமிழ் சினிமா சுய முகத்துடன் வளர்வதற்கு முதலில் நம் சினிமா கலைஞர்கள் தன் அகத்தில் தேக்கி வைத்திருக்கும் சினிமா பற்றிய போதிய அறிவின்மையை தகர்தெறிந்து தென்னிந்திய போலி சினிமாக்களின் பிடியிலிருந்து நம் படைப்புணர்வை காப்பாற்றி கொண்டு சுயமான புரிதல்களுடன் திரைப்படத்தை உருவõக்க முனைய வேண்டும். அப்படி உருவாக்கப்படும் படைப்புதான் நம் தமிழ் சினிமாவின் ஊற்றுக்கண்ணை திறந்து நிற்கும். இதுவரை காலம் நம்முடைய ஒரு திரைப்படங்களிலும் படைப்பு என்கிற அந்தஸ்துடன் அணுகுவதற்கு ஏதேனும் ஒரு சினிமா இருக்கின்றதா? எண்ணிக்கைகளால் நாம் நம்முடைய சினிமாவை உயர்த்துவதை விட நம் எண்ணங்களில் சினிமா குறித்து மிக உயர்வான மதிப்பீடு எழ வேண்டும் . சினிமா என்பது வெறும் கதையாடல் மட்டுமல்ல, அது வாழ்வை மறு உருவாக்கம் செய்யும் மகத்தான சாதனம். “சினிமா என்ற வளமான கலை வடிவம் கதையாடல் ரீதியான பொழுது போக்காகச் சீரழியக் கூடாது என்றால் அது புதிய சிந்தனைகளை ஏற்று வளர்ச்சி பெற்றே தீர வேண்டும் . இந்த வளர்ச்சியே சினிமா என்கிற வடிவத்தின் இலக்கு’ என்கிறார் செர்கய் ஜஸன்ஸ்டின் அதனால் நம்முடைய சினிமா வளராமைக்கு காரணங்களை வெறுமனே வெளியில் தேடுவதை விட்டு விட்டு நம்முடைய படைப்புணர்வை வளர்த்துக் கொள்வோம். சினிமா வெறும் தொழில்நுட்ப சாதனமல்ல, அது வாழ்வின் புதிர்களை தேடித் திரியும் ஞானியை போன்றது. நம்முடைய சினிமா வளராமைக்கு நாமேதான் காரணம். நாம் இன்றும் தென்னிந்திய சினிமாவையே நம்பிக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய புரிதல்கள் மாற வேண்டும். நல்ல சினிமாவை தேடி நம்மவர்கள் சென்று கற்று கொள்ள வேண்டும். அந்த நல்ல விடயங்களுக்காக நாம் தீவிரமாக உழைக்க வேண்டும் அப்போதுதான் தமிழில் அசலான சினிமா கலைஞன் பிறப்பான். “நமது போராட்டத்தின் முன்னணியில், மிக முற்போக்கான கலைவடிவமான சினிமா இருந்தாக வேண்டும். சமாதானத்துக்கும் மனித குல மேம்பாட்டுக்குமான பாதையை உலக நாடுகளுக்குக் காட்ட வேண்டிய பெரும் பொறுப்பை சினிமா என்கிற நவீன கலைவடிவம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்’ என்ற செர்கெய் ஜஸன்ஸ்டின் அறிவிப்பை நாம் கவனத்துடன் உள்வாங்குவோம். நாம் நமக்கென்றொரு வாழ்வு மண், கலை, கலாசாரம், பிரத்தியேகமான போராட்ட வரலாறு, தனித்துவமான இலக்கிய செல்நெறிகள், பிரதேசம் சார்ந்த தனித்தன்மை கொண்ட வாழ்க்கை, நடைமுறைகள், கலை வெளிப்பõடுகள், திறமையான கலைஞர்கள் என்று இருக்கும் போது நாம் ஏன் நம் சினிமாவில் மட்டும் தென்னிந்திய சினிமாவின் உளுத்துபோன வியாபார குப்பைகளிலிருந்து நம் திரைப்படங்களை உருவாக்க வேண்டும். நமது பிரதேசம் சார்ந்த எத்தனையோ இலக்கியங்கள் நமக்கு இருகின்றது. நல்ல நாவல்கள், சிறந்த சிறுகதைகள், நவீன ஆற்றுகை, சிற்பம், கலை, ஓவியம், புகைப்படக் கலை என்று ஈழத் தமிழர்களின் அடையாளத்துடன் நம் படைப்பு முகம் மிக விசாலமானது. நாம் ஏன் நமக்கேயான கலை மரபுகளிலிருந்து உள்வாங்கிய தனித்துவத்துடனான சினிமா மொழியை உருவாக்கக் கூடாது. “ஒவ்வொரு ஓவியருக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகளும் பரந்த ஆளுமைகளும் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஈழத் தமிழருக்கான அடையாளங்கள் இல்லை. பலர் நினைத்துக் கொண்டிருப்பது போல் நமக்கான அடையாளம் என்பது நமது போரியல் வாழ்வு அவலங்களைச் சொல்வது மட்டுமல்ல, அவை நமது வாழ்வியல் தடயங்கள் மாத்திரமே. அதற்கும் மேலாக நமது சொந்த ஓவிய மொழி இன்னும் பயில் நிலையிலேயே உள்ளது என்கிறார் நவீன ஓவிய கலைஞன் கிக்கோ. திரைப்பட மொழியின் வடிவம் பற்றி பேசுவதற்கு நம்மிடம் எந்த படைப்பும் இல்லை. நாம் இத்தனை வருட காலத்தில் ஒரு உருப்படியான சினிமாவை எடுக்க முடியாதவர்களாக இருக்கின்றோம் என்பதை நினைத்து வெட்கப்படுவதை தவிர வேறென்ன செய்ய முடியும். சிறந்த இலக்கியங்களில் அந்த மண்ணின் அடையாளங்கள், நாம் நமது சிறப்பான இலக்கிய பிரதிநிதிகளிலிருந்து நமக்கான சினிமா மொழியை தேடுவோம். சிங்கள சினிமாவின் சினிமா முகம் கம்பெரலிய என்கிற நாவலிலிருந்துதான் புலப்பட்டது. மலையாள, வங்க சினிமாக்கள் இன்று விதந்து பேசப்படுவதற்கு காரணம், அதன் மூலங்கள் அந்த மண்ணின் சுயத்தை தேடும் இலக்கிய எழுத்துருக்களிலிருந்து மறுவடிவமாக மாற்றப்பட்டது தான். சத்யஜித்ரே, ஆடூர் கோபாலகிருஷ்ணன், சியாம் பெனகல், போன்ற திரைப்பட கலைஞர்களின் படைப்புகள் பெருமளவில் இலக்கிய வகையிலிருந்துதான் உருவõகியிருக்கின்றன. சிங்கள சினிமாவில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் புதிய வழித்தடத்தின் வழி நம் சினிமாவும் நல்ல படிப்பனைகளை உள்வாங்கிக் கொண்டு நமக்கேயான அடையாளம் சார்ந்த உன்னதமான படைப்புடன் இலங்கைத் தமிழ் சினிமாவின் புதிய வரலாற்றை உத்வேகத்துடன் எழுதுவதற்கு முனைவோம். நம் தமிழர்களும் திரைப்பட ஆர்வலர்களும் நமது சினிமாவின் மூலமாக நம் வாழ்வின் குறுக்கு வெட்டு தோற்றத்தை எழுதி செல்ல வேண்டும். தமிழ் சினிமாவின் பெரும் பிம்பத்தின் முன் நாம் புதைந்து போய் விடாமல் நம் சுயங்களை காப்பாற்றிக் கொண்டு உலகத் தமிழர்களின் சினிமாவாக நம் இலங்கை தமிழ் சினிமாவை முன் நிறுத்தி புதிய வழித் தடத்தை ஏற்படுத்தி செல்வோம். இதுவே இந்நு}ற்றாண்டின்
கனவு

 

 
நன்றி- வீரகேசரி

 

Advertisements

Comments are closed.

%d bloggers like this: