மரணங்கள் பற்றிய சில குறிப்புகள்


எப்போதும்
எதுவும் நிகழ்ந்துவிடலாம்
என்ற நினைவுகளுடனே
கடக்க முடியாத
வாழ்வு என் முன்பு
நகரத்துக்கான
முன் தயாரிப்புகொண்ட
இருப்பின் பின் நழுவும்
உள் வறண்ட
கவிதைகளின் தனி
குரல் வளையங்கள்
நான்
காரணமற்று
கைது செய்யப்படலாம்
சிறவைக்கப்படலாம்
சித்திரவதையுடன் என்
‘நான்’ வீதியோரங்களில்
பிணமாக
து}க்கி வீசப்படலாம்
இன்னும்
வன்முறை நிகழலாம்
அவசரகால
சட்டங்களும்
தேடுதல்களும் இன்னும்
பிறவும் என்
பகல் பொழுதுகளையும்
அச்சுறுத்துகின்றது…
எப்போதும்
என் நாளை
குறி வைத்து துரத்தியபடி
துப்பாக்கிகள்
நான்
சிவிலியனாக இருப்பதனாலும்
இன்றும் சிரமங்கள்
வேலையற்று இருப்பதனாலும்
சந்தேகங்களுக்கு
சாட்சியாக மாறக் கூடும்

எந்த கணமும்
“நான்”க்கு
எதுவும் நிகழலாம்
நான்
இருப்பதனால்தான்
இருப்பின் விளிம்புகள்
ஊசலாடியபடி இருக்கின்றது

மரணம் கூட
அடையாளமற்று போகலாம்
நான்
ஓர் நாளில்
காணாமல் போகலாம்
ஏனென்றால் நாம்
வாழும் நாடு நம்மை
எதுவும் செய்யலாம்
மரணங்களை பற்றிய
குறிப்புகளை தயார் செய்யும்படி
நிர்பந்திக்கும்
வாழ்வின் வன்முறைக்கு முன்பு
“நான்”
என்ன நான்!

Advertisements

Comments are closed.

%d bloggers like this: